சாயும் காலம்

விழித்திருக்க முடியாத இரவை
நோக்கி நகர்கிறது என் வாழ்க்கை
அவற்றில் உன் நினைவுகளும்
என் துயரங்களும்
தூங்கிப்போய்விடுகின்றன

ஒரு நீண்ட அசதியான
நாளின் முடிவில் நிகழ்கிறது
நம் சந்திப்பு

நீ அழகாய் இருக்கிறாய்
உனை காதலிக்கிறேன்
உன் நினைவுகளில் வாடுகிறேன்
இப்படியான வார்த்தைகள்
எங்கும் பரவிக்கிடக்கின்றன

எந்த முயற்சிகளும்
எந்த உணர்ச்சிகளும் இல்லாமல்
எளிதாய் கோர்கப்பட்டுவிடுகிறது
நம் உரையாடல்களுக்கிடையே

உன் அருகில் உட்கார்ந்து
வார்த்தைகளுக்கு இடமளிக்காது
உன் மூச்சுக்காற்றை உணரமுடியாத
சந்திப்புகளை வெறுக்கிறேன் நான்

சிறுமுத்தம் கனநேர அரவணைப்பு
இவற்றில் உணர்த்தவே விரும்புகிறேன்
நான் என் காதலை

வார்த்தைகள்
வெறும் வார்த்தைகளாய்
போய்விடுகின்றன

Advertisements