எழுதி என்னவாகப் போகிறது

எழுதுவதை நிறுத்திவிடலாம்
என்றே நினைக்கிறேன்

அவை கோர்வையாய்
அழகாய் அமைவதில்லை

அவற்றால் தெளிவாய்
எதையும் சொல்ல முடிந்ததில்லை

யாருடைய நினைவிலும் நில்லாத
ஒரு புலம்பலை போலவே
அமைந்துவிடுகின்றன

எழுத்துக்கள் கொடூரமானவை
அவற்றில் தூங்காத இரவின் பெருமூச்சு
கலந்திருக்கின்றன

கடந்த காலத்தின் பாவகணக்குகள்
தீர்க்கப்படும் ஒரு நள்ளிரவு நாளில்
நான் எழுத ஆரம்பித்ததாகவே
நினைக்கிறேன்

எப்படியாவது எழுதிவிடத் துடிக்கின்றன

உன் புன்னகையிலும்
உன் கண்களிலும்
வாசித்த கவிதைக்கு நிகராக
எதையாவது எழுதிவிடத் துடிக்கின்றன

தோல்வியின் விளிம்பில் நின்று
மீண்டும் அதை வாசிப்பதற்காய்
ஏங்கித் தவிக்கின்றன

எதையும் உணர்த்தாத வார்த்தைகளும்
அமைதியாய் சொல்ல முடியாத
ஒரு வலியும்
மட்டுமே மிஞ்சுகிறது

Advertisements