யாரும் கவனித்ததாக தெரியவில்லை

நான் கடைசியாய் எழுத ஆரம்பித்ததை
முடித்து விடலாம் என்றே
நினைக்கிறேன்

கவிதைகளோ
கவிதை என்ற பெயரிலோ
எழுதுவதற்கு பயமாய் இருக்கிறது
அவை கேள்விகளால் எழுத்தை
மௌனிக்க செய்கின்றன

எதைப்பற்றி எழுதுவது

எதில் தொடங்கி எதில் முடிப்பது

மனப்பிறழ்வுக்கு வழிவகுக்குமா

தற்கொலைக்கு தள்ளிவிடுமா

முடிவில்லாத வேதனையின் தொடர்ச்சியாக
நீண்டுகொண்டே செல்லுமா

இப்படி தொடர்ந்து கொண்டே இருக்கிறது
அதன் மிரட்டல்கள்

வேகமாய் வந்த யுத்த செய்திகள்
புரட்டி தூக்கி எரிந்துவிட்டது
எழுத்தையும் வாழ்வின் மீதான
நம்பிக்கையையும்

அவை யுத்தத்தில் அநாதரவாய்
துடிதுடித்து செத்து கொண்டிருந்தது

சித்தியின் அழுகையும்
கலைஞரின் நாடகத்தின் மயக்கமும்
காற்றோடு கறைத்துப்போனது என் கதறலை

தூக்கு கயிற்றின் விளிம்பில் நின்று
எழுதிக்கொண்டிருக்கிறேன்
யாரும் கவனித்ததாய் தெரியவில்லை

இவை என் கடைசி எழுத்துக்களாய்
இருக்கலாம்

நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன்

இலவச மிக்சி கிரைண்டருக்காய்
சூரியன் உதிக்க வேண்டுமென்று
அவசர அவசரமாய் வாக்குபதிவுக்கு
கிளம்பியபோதோ
கிரிக்கெட் பார்க்க இலங்கைக்கு
டிக்கெட் வாங்க ஓடியபோதோ
தட்டிவிடப்பட்டதில் தகர்க்கப்பட்டிருக்கலாம்
என் கடைசி நம்பிக்கையும்

யாரும் கவனித்ததாக தெரியவில்லை

Advertisements