ஆசையின் ஏக்கம்

  Posted by Picasa

அன்புள்ள ….. ,
ஞாபகமிருக்குமென்றே
நினைக்கிறேன்
என் பெயர் உனக்கு..

வழக்கமான தொடக்கம்தான்
இருந்தும் அறிந்தே இருக்கிறேன்
சத்தமாய் உச்சரிக்க சத்தமில்லாமல்
ஏங்கும் உன் மனதை

மழைபெய்து ஓய்ந்த
மாலைநேர தேநீர் போல
இனம்புரியாத இதமாக இருக்கிறது
உன் நினைவுகள்

இருபத்தி இரண்டு வருடங்கள்.

பேருந்து பயணம் போல
கடந்துவிட்டது வாழ்க்கை
இதில் நான்கு வருடங்கள்
உன் தோள் சாய்ந்து…

தெரிந்தும் தெரியாமலும்
தோள்வாங்க நினைத்து
விழுந்து காயப்படுகிறேன்
இப்போதெல்லாம்

காயங்களை நினைத்து
நானே சிரித்துக் கொள்கிறேன்
எல்லோருடன் சேர்ந்து…

ஆனாலும்
இன்னும் நினைவிருக்கிறது
மெதுவாய் புன்னகைத்து
தலையை திருப்பி
நீ
கண்களை துடைத்துக் கொண்டதை

அது எனக்காக
என்று சந்தோசமாய்
இருந்த தருணத்தில் தான்
நடுத்தெருவில்
எனை கதறி அழவிட்டு
கைப்பிடித்து போகப்பட்டாய்

இன்றும்
உதடுகளை புன்னகைக்க விட்டு விட்டு
அழுது புரள்கிறது
மனது

ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்
உன் அரவணைப்பின்
கதகதப்பில் கேட்கப்படும்
என் வேதனையின் முனங்களுக்காய்..
என் மூச்சுக்காற்று
முனங்கும் முன் வந்துவிடுவாய்
என்றே நினைக்கிறேன்.

இன்றும் அன்புடன்
பிரேம்

Advertisements