தலைப்புகளில் சிக்கிக் கொள்வதில்லை உணர்ச்சிகள்

“காதலைத் தான் காதலித்தேன்
காதலியை அல்ல!!!”
காதலில் தோற்றவர்களுக்கும்
காதலி கிடைக்காதவர்களுக்கும்
பிள்ளையார் சுழி
இந்த வரிகள்….!!??

இதில் நான் எந்த இடத்தில்
எல்லைக் கோடு யாருடையது?
கேட்டால் என்னவென்று சொல்வது

மிகப்பெரிய காயத்தை
யாசித்து பெற்றுக்கொண்டேன்
உன் சிறு காயத் தழும்பை
மறைப்பதற்காக..

யாருக்கும்
பிடிக்காமல் போவேன் எனத்
தெரிந்திருந்தால்!!
உதாசினப்படுத்தியிருக்க மாட்டேனடி
உன்னை!!??

என்னையும் ஒருத்திக்கு
பிடிக்கும்..!
என்பதற்கு சாட்சியாகவாவது
இருந்திருப்பாய்.

இங்கு
திரெளபதிக்கு ஆசைப்பட்டு
அர்ஜுனன் கூட
சகுனியாகிப் போனானடி!?

சேரனின் அம்புகள் கூட
பாண்டியன் திரும்பி இருக்கும்
தருணம் பார்த்தே பாய்கிறது

நன்றி கெட்டவர்களை
நினைத்து வற்றிப்போனதடி
நெஞ்சின் ஈரங்கள்

வா
உன் கூந்தலின் ஈரத்தில்
வந்து நனைத்து
விட்டுப்போ.

முதுகில் காயப்பட
இடமும் இல்லை
நெஞ்சிலோ கீறல் கூட
இல்லை

சித்திரவதைக் கூடத்தை
நானே திறந்து வைக்கிறேனடி
வந்து அணுஅணுவாக
சித்திரவதை செய்.

என் கண்ணீரின் ஈரத்தில்
உன் கோபத்தை தணித்துக்கொள்.

இது கவிதையும் அல்ல
புலம்பலும் அல்ல

இரத்தங்கள்

நினைவுகளின் தழும்புகளை
குத்திக் கொண்டதின்
விளைவுகள்

வெகு நாளைக்கு பிறகு
ஆசைப்படுகிறேனடி
முகவரி இன்றி தொலைந்து போக.

வா வந்து சொல்லிவிட்டுப்போ
உன்னை காதலிக்கிறேன் என்று.

– பிரேம்

Advertisements